பார்வர்டு பிளாக், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம்; சட்ட நகலை எரித்த 56 பேர் கைது
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தேனியில் போராட்டம் நடந்தது. சட்ட நகல்களை எரித்த 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தேனி நேரு சிலை சிக்னல் அருகில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள், பள்ளிவாசல் தெருவில் இருந்து கம்பம் சாலை வழியாக நேரு சிலை சிக்னலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமசாமி, மாவட்ட செயலாளர் மாயாண்டி, மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலின் போது சட்ட நகல்களை தீ வைத்து எரித்தனர். அவற்றை போலீசார் தடுக்க முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எரிக்கப்பட்ட சட்ட நகல்களை போலீசார் பறித்து தீயை அணைத்த நிலையில், அவற்றை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் அபகரித்து தீ வைத்து எரித்தனர். தொடர்ந்து அவர் கள் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தேனி பங்களாமேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி முன்னிலை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் கருத்தையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story