தூத்துக்குடி மாநகரில் 15 இடங்களில் மோட்டார்கள் அமைத்து மழைநீரை அகற்றி வருகிறோம் - கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேட்டி


தூத்துக்குடி மாநகரில் 15 இடங்களில் மோட்டார்கள் அமைத்து மழைநீரை அகற்றி வருகிறோம் - கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 11 Dec 2020 3:45 AM IST (Updated: 10 Dec 2020 11:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகரில் தேங்கிய மழைநீரை 15 இடங்களில் மோட்டார்கள் அமைத்து அகற்றி வருகிறோம் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கூறினார். இதுகுறித்து அவர் நேற்று கலைஞர் அரங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அறிந்தும், அறியாதது போல இருக்கிறார்கள். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பதால் நான் என்ன வேலை சொன்னாலும் மாநகராட்சி அதிகாரிகள் செய்வதில்லை. குறிப்பாக மாநகர பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற மோட்டார் பம்ப், டேங்கர் லாரி போன்றவற்றை நான் கேட்டால் அனுப்புவதில்லை.

இருப்பினும் நாங்கள் எங்களது சொந்த செலவில் 15 இடங்களில் மோட்டார் பம்புகளை அமைத்து தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். இன்னும் 10 மோட்டார் பம்புகள் ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் வாங்கி வருவதற்கு ஏற்பாடு செய்து உள்ளோம். இவ்வாறு நாங்களே சொந்தமாக மோட்டார் பம்புகளை அமைத்து தண்ணீரை வெளியேற்றினாலும் ஆளும்கட்சியினர் இடையூறு செய்கிறார்கள்.

நாங்கள் இரவு, பகலாக பணியாற்றி மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், எங்களை பணி செய்யவிடாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அசரமாட்டோம். தொடர்ந்து மக்கள் பணிகளை செய்வோம்.

தூத்துக்குடியில் செயின்ட் மேரீஸ் காலனி, லூர்தம்மாள்புரம், பாத்திமாநகர், வெற்றிவேல்புரம், பிரையண்ட் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பம்ப் ஹவுஸ்களில் 6 எச்.பி. திறன் கொண்ட மோட்டார்கள்தான் உள்ளன. அவைகளும் முறையான பராமரிப்பு இல்லாததால் சரியாக இயங்குவது இல்லை. இந்த மோட்டார்களை 20 எச்.பி. திறன் கொண்டதாக மாற்ற வேண்டும். அவ்வாறு அதிக திறன் கொண்ட மோட்டார்கள் இருந்திருந்தால் தற்போது மழைநீரை விரைவாக வெளியேற்றி இருக்க முடியும்.

இதேபோல் மழைநீர் வடிகால்கள் திட்டமிட்டு முறையாக கட்டப்படுவதில்லை. இதனால் வடிகால்களில் தண்ணீர் வெளியேறாமல் தொட்டி போல் தேங்கி நிற்கிறது. மாநகரின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 நாட்கள் ஆகியும் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. பிரதான சாலை பகுதிகளில் மட்டுமே மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து உள்ளனர். உள்புற பகுதிகள், குறிப்பாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி நிற்கிறது.

பல இடங்களில் மாநகராட்சி சார்பில் தண்ணீரை வெளியேற்ற வைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகள் முறையாக இயங்கவிலலை. சில பகுதிகளில் இன்னும் தண்ணீரை வெளியேற்றும் பணிகளையே மாநகராட்சி நிர்வாகம் தொடங்கவில்லை. இதற்கு மாநகராட்சி மற்றும் அரசின் நிர்வாக சீர்கேடு தான் காரணம். எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபடுவதாக அமைச்சர் கூறுகிறார். நாங்கள் களப்பணியில் உள்ளோம். பாதிக்கப்பட்ட மக்கள்தான் மறியலில் ஈடுபடுகின்றனர்.

இதேபோன்று மாநகர பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள எல்.இ.டி. விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் மாநகராட்சியின் பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. இதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story