எந்த வடிவில் இருந்தாலும் தீண்டாமையை களைந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; மாவட்ட நீதிபதி கருணாநிதி பேச்சு
எந்த வடிவில் இருந்தாலும் தீண்டாமையை களைந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நீதிபதி கருணாநிதி கூறினார்.
சட்ட விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான சுபாதேவி உத்தரவின்பேரில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் இணையவழியில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி தலைமை தாங்கினார்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கலந்து கொண்டார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு பெற...
மாவட்ட நீதிபதி கருணாநிதி பேசுகையில், மனித உரிமைகள் என்பது நாட்டில் எல்லோரும், எங்கும் சமமாக வாழ உரிமை உள்ளதாகும். உரிமை என்பது யாரும் வழங்க வேண்டியதில்லை. பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் இயற்கையாகவே கிடைத்து விடுகிறது. தீண்டாமை என்பது எந்த வடிவில் இருந்தாலும் அவற்றை களைந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஒருவரின் உரிமையை தடுப்பது சட்டத்தின் முன் குற்றமாகும். மேலும் பொதுமக்கள் தங்களின் சட்டம் மற்றும் சட்டம் சாராத அனைத்து பிரச்சினைகளுக் கும் தீர்வினை பெற பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம், என்றார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா பேசுகையில், பெரம்பலூரில் பெண்கள் பாதுகாப்பிற்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து காவல்துறை செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் பொதுவான வேத நூலாக இந்திய அரசியல் சட்டம் உள்ளது. அனைவருக்கும் உரிமையினை பெற சம வாய்ப்பு உள்ளது, என்றார்.
முகாமில் வக்கீல் சுந்தரராஜன், வளரிளம் பருவத்தினருக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தை திருமண முறை ஒழிப்பு திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரூபிகா, ஒருங்கிணைந்த சேவை மைய ஒருங்கிணைப்பாளர் கீதா மற்றும் போலீசார், வக்கீல்கள், கொளக்காநத்தம், மலையாளப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story