ஜீயபுரம் அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற லாரியால் பாலம் உடைந்தது; பொதுமக்கள் கடும் அவதி


உடைந்த பாலத்தை படத்தில் காணலாம்
x
உடைந்த பாலத்தை படத்தில் காணலாம்
தினத்தந்தி 11 Dec 2020 2:20 AM IST (Updated: 11 Dec 2020 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஜீயபுரம் அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற லாரியால் பாலம் உடைந்தது. இதனால், அந்த பாலத்தை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பாலம் உடைந்தது
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட படலாயி அம்மன் கோவில் செல்லும் வழியில் ராமவாத்தலை வாய்க்காலின் மேல் பகுதியில் ஒரு சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களை கொண்டு சென்று வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வலுவிழந்து காணப்பட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இந்த பாலத்தின் வழியாக வாழைக்கு முட்டு கொடுக்க சவுக்கு கட்டைகளை ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் ஒரு லாரி சென்றது. அப்போது அந்த பாலம் திடீரென உடைந்து விழுந்தது. பாலம் உடைந்ததில் லாரியின் பின்பக்க சக்கரம் வாய்க்காலில் இறங்கியது. பின்னர், பொக்லைன் எந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது.

பொதுமக்கள்
தற்போது உடைந்த பாலத்தை சுற்றி சிவப்பு துணிகள் கட்டப்பட்டுள்ளது. பாலம் உடைந்ததால் இதன் வழியாக விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகளும், நடந்து கூட செல்ல முடியாமல் பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இன்னும் ஒரு மாத காலத்தில் அந்த பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் நெல் அறுவடை நடைபெற இருப்பதால் உடைந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துளளனர். உடைந்த பாலத்தை ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா ஆனந்தன் பார்வையிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story