பாபநாசம் கோவிலில் நகை திருடிய 2 ஊழியர்கள் கோர்ட்டில் ஆஜர்
பாபநாசம் கோவிலில் நகை திருடிய 2 ஊழியர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அம்பை,
நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவிலில் உள்ள நகைகளை கோவில் நிர்வாகத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தபோது, 25 பவுன் நகைகள் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து கோவில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோவில் அர்ச்சகரான விக்கிரமசிங்கபுரம் சன்னதி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுடலைமுத்து (வயது 28), கோவில் தற்காலிக பணியாளரான டாணா வாட்ச்மேன் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து கோவிலில் உள்ள 25 பவுன் நகைகளை திருடி, அதனை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் மதிப்பிலான 3 தங்க கட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான சுடலைமுத்து, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று அம்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story