நெல்லையில், இரவில் பயங்கரம்: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்


நெல்லையில், இரவில் பயங்கரம்: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 11 Dec 2020 3:45 AM IST (Updated: 11 Dec 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை,

நெல்லை பழைய பேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மகன் காளிராஜ் (வயது 25). கேபிள் டி.வி. நிறுவனத்தில் ஊழியராக இருந்தார்.

இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மேகலா (24) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் உறவு முறை தொடர்பாக காளிராஜிக்கும், மேகலா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் பேட்டையில் இருந்து காளிராஜ் பாளையங்கோட்டை ரகுமத்நகருக்கு சென்றுவிட்டார். அங்கு தனியாக வீடு எடுத்து மனைவியுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவில் காளிராஜ் மோட்டார் சைக்கிளில் சாந்திநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. காளிராஜ் சுதாரிப்பதற்குள் அவரை சரமாரியாக அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே காளிராஜ் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காளிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காளிராஜ் முறை தவறி திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். நெல்லையில் வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story