கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து: மோட்டார் சைக்கிள்-கார் நேருக்கு நேர் மோதல்; காதலி சாவு - காதலனுக்கு தீவிர சிகிச்சை


கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து: மோட்டார் சைக்கிள்-கார் நேருக்கு நேர் மோதல்; காதலி சாவு - காதலனுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 11 Dec 2020 4:00 AM IST (Updated: 11 Dec 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி காதல் ஜோடி மீது கார் மோதிய விபத்தில், காதலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மாமல்லபுரம்,

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி கார்டனை சேர்ந்தவர் கிஷோர் (வயது 19). சென்னை பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் பகுதியை சேர்ந்த கவுதமி (19). இவர்கள் 2 பேரும் சென்னை அடையாரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு பயின்று வந்தனர்.

ஒரே கல்லூரியில் படித்த இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர்களான இருவரும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கவுதமி பின்னால் அமர்ந்து கொள்ள, கிஷோர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பேரூர் அருகே இடது பக்கமாக சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் சுக்குநூறாக அப்பளம் போல் நொறுங்கியதில், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் கவுதமிக்கு தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்த கிஷோரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story