நண்பரை கொன்றவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் ரவுடி கைது
நண்பரை கொன்றவர்களை தீர்த்துக் கட்ட துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின்பேரில் நேற்று காலை காஞ்சீபுரம் அருகே பதுங்கியிருந்த வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடியான தொப்பை கணேசன் (வயது 30) என்பவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, 5 நாட்டு வெடிகுண்டுகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், கடந்த அக்டோபர் மாதம் இவரது நண்பரான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வக்கீல் ராஜேஷ் (38) என்பவர் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான அருண்பாண்டியன், முருகேசன், சூச்சி சுரேஷ் ஆகியோர் சிறையில் இருந்து விரைவில் வெளிவர உள்ளதாக தெரிகிறது.
எனவே தனது நண்பரை கொன்றவர்களை பழிக்குப்பழியாக தீர்த்து கட்டும் நோக்கில் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுடன் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் செங்குன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரை கொலை செய்யவும் திட்டமிட்டது தெரியவந்தது.
இதற்காக அந்த துப்பாக்கியை செங்குன்றத்தை சேர்ந்த சேது என்பவரிடம் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பே வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. கைதான கணேசன் மீது 5-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உட்பட 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story