தோட்டக்கலைத்துறை வளர்ச்சித் திட்டப் பணிகள்; கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு


அங்கக முறை சாகுபடி திட்டம் பயிர்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு நடத்தியபோது
x
அங்கக முறை சாகுபடி திட்டம் பயிர்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு நடத்தியபோது
தினத்தந்தி 11 Dec 2020 5:06 AM IST (Updated: 11 Dec 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, ராமநாதபுரம், போகலூர் ஆகிய யூனியன்களுக்குட்பட்ட கிராமங்களில் தோட்டக்கலைத்துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். எட்டிவயல் கிராமத்தில் இயற்கை விவசாயி தரணி முருகேசன் என்பவர் தனது சொந்த வயலில் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் ஊக்கத்தொகை திட்டம் மற்றும் அங்கக முறை சாகுபடி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வாழை, சப்போட்டா போன்ற பணப்பயிர்களும், கத்தரி, வெண்டை, கீரை உள்ளிட்ட பல்வேறு காய்கறி வகைகளும் பயிரிட்டு பராமரித்து வருகிறார்.

இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டு பயிர் பராமரிப்பு குறித்து விவசாயிகளிடத்தில் கேட்டறிந்தார். தொடர்ந்து, போகலூர் கிராமத்தில் விவசாயி கோவிந்தன் என்பவர் தோட்டக்கலைத் துறையின் மூலம் 50 சதவீத அரசு மானியத்தில் பண்ணைக்குட்டை அமைத்து, சீமைக்கருவேலை மரங்களை அகற்றி விளைநிலமாக மாற்றும் முயற்சியில் முதற்கட்டமாக 1 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் மற்றும் காய்கறி சாகுபடி செய்து வருவதை கலெக்டர் பார்வையிட்டார்.தொடர் முயற்சியின் மூலம் அதிக பரப்பளவில் சாகுபடி செய்து வேளாண்மைப் பணிகளை விரிவுபடுத்த கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

நுண்ணீர்பாசனம்
அதனைத் தொடர்ந்து, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பனையடியேந்தல் கிராமத்தில் மிளகாய் சாகுபடி செய்துவரும் விவசாயி லூர்துசாமிக்கு பிரதம மந்திரி நுண்ணீர் பாசனம் திட்டத்தின் கீழ் 75 சதவீத அரசு மானியத்தில் ரூ.36,000 மதிப்பிலான மழைத்தூவான் கருவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மழைத்தூவான் கருவியின் திறன் மற்றும் செயல்பாடு குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்து விவசாயியிடம் கேட்டறிந்தார்.மழைத்தூவான் கருவியின் மூலம் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த முடிகிறது எனவும், குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெற பயன் உள்ளதாக இருக்கிறது என விவசாயி தெரிவித்தார்.

தொடர்ச்சியாக, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், அச்சடிபிரம்பு கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஐந்திணை பாலை மரபணு பூங்காவின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். பூங்காவின் நீர் ஆதாரமாக அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளில் சமீபத்தில் பெய்த மழைநீரைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட தோட்டக்கலை அலுவலர்களை கலெக்டர் பாராட்டினார். மேலும், பூங்காவின் நடைபாதை மற்றும் அலுவலக கட்டிடம் ஆகியவற்றை சீரமைத்திட திட்டவரைவு தயாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.அப்போது, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் நாகராஜன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள் புனித சுகன்யா, முத்து ராகேஷ், சுகன்யா, தாசில்தார்கள் செந்தில்வேல், முருகவேல், வீரராஜா உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story