பெங்களூருவில், தமிழக தொழிலாளி கொலையில் வாலிபர் கைது - மனைவியை கிண்டல் செய்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்


பெங்களூருவில், தமிழக தொழிலாளி கொலையில் வாலிபர் கைது - மனைவியை கிண்டல் செய்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 11 Dec 2020 3:15 AM IST (Updated: 11 Dec 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், தமிழக தொழிலாளி கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மனைவியை கேலி, கிண்டல் செய்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு ஜே.பி.நகர் அருகே வசித்து வந்தவர் ராஜதுரை (வயது 27). இவரது பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். ஜே.பி.நகரில் உள்ள மார்க்கெட்டில் தொழிலாளியாக ராஜதுரை வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் (நவம்பர்) 29-ந் தேதி வேலைக்கு சென்ற அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. ராஜதுரையை, அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தார்கள். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ராஜதுரையை காணவில்லை என்று, அவரது சகோதரர் ஜே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

இதற்கிடையில், பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லிங்கராஜபுரம் ரிங்ரோட்டில் உள்ள புதரில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே பானசாவடி போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவர், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ராஜதுரை என்று அடையாளம் காணப்பட்டது. அவரை, மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு மர்மநபர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில், போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் ராஜதுரையை கொலை செய்ததாக பாலாஜி என்ற வாலிபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், பாலாஜியின் மனைவி, ஜே.பி.நகரில் உள்ள மார்க்கெட்டில் வேலை செய்துள்ளார். அவரை ராஜதுரை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த மாதம் 29-ந் தேதி ராஜதுரையுடன் பேச வேண்டும் என்று கூறி ஆட்டோவில் பானசாவடிக்கு அழைத்து வந்துள்ளனர். அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து ராஜதுரையை உருட்டு கட்டைகளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர் அவரது உடலை லிங்கராஜபுரம் ரிங்ரோட்டில் உள்ள புதரில் வீசியது தெரியவந்தது. கைதான பாலாஜி மீது பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

Next Story