லைசென்ஸ் பெற வருபவர்களுக்கு குறும்படம் மூலம் விழிப்புணர்வு; அசத்தும் மோட்டார் வாகன ஆய்வாளர்


குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செந்தில்குமார். அருகில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன்
x
குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செந்தில்குமார். அருகில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன்
தினத்தந்தி 11 Dec 2020 6:06 AM IST (Updated: 11 Dec 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மோட்டார் வாகன ஆய்வாளர், லைசென்ஸ் பெற வருபவர்களுக்கு குறும்படம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

வாகன ஆய்வாளர்
மதுரையில் வடக்கு, தெற்கு, மத்திய என 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஓட்டுனர் உரிமம், பழகுனர் உரிமம் பெற வருபவர்களின் ஆவணங்களை சரிபார்க்க எப்படியும் 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அந்த நேரத்தை வீணாக்காமல் இருக்க, அங்கு வருபவர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான தகவல்களை குறும்படம் காண்பித்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றுபவர் செந்தில்குமார்.

இதற்காக இவர், விபத்துகளின்போது கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் வகையிலான குறும்படத்தை தயாரித்து அதனை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டி.வி. மூலமாக தினமும் ஒளிபரப்புகிறார். அந்த குறும்படத்தில் அனைத்துவிதமான சாலை போக்குவரத்து தொடர்பான தகவல்களும் அடங்கி இருப்பதாக கூறும் அவர் கூறியதாவது:-

சாலை விபத்துகள்
மதுரை சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிசந்திரன், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன் ஆகியோரது மேற்பார்வையில் பொதுமக்களுக்கு குறும்படம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். பொது இடங்கள், கல்லூரிகளுக்கு சென்று சாலை விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது என்பதால், தினமும் என்னை சந்திக்கும் 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.

வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு தொடர்பான வீடியோ, போக்குவரத்து போலீசாரின் 25 வகை சிக்னல்களின் அர்த்தங்கள், விழிப்புணர்வு பாடல்கள் உள்ளிட்டவைகளையும் அதில் இணைத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story