மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு


மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Dec 2020 4:15 AM GMT (Updated: 11 Dec 2020 4:15 AM GMT)

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நகரில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் மற்றும் ஆள்நுழைவு தொட்டிகள் அடிக்கடி உடைந்து சாலைகள் உள்வாங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 5-ந் தேதி மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை கொத்ததெருவில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி உடைந்து 15 அடி ஆழத்திற்கு மேல் சாலை உள்வாங்கியது. இதனால் தரங்கம்பாடி சாலை போக்குவரத்துகள், தருமபுரம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தற்போது கொத்தத்தெருவில் சாலை உள்வாங்கிய பகுதியில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

ஆய்வு

இந்த பணியை நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதாள சாக்கடை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். மேலும் அடிக்கடி பாதாள சாக்கடை குழாய்கள் உடைவதால் கழிவு நீரேற்றம் தடைபடுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வாக 2 கி.மீ. தூரம் சாலையின் ஓரத்தில் புதிய குழாய் பதிப்பதற்கு ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அப்போது அவருடன் நகராட்சி நிர்வாக கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன், நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் சரவணன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமா மகேஸ்வரி, மண்டல பொறியாளர் பார்த்திபன், நகராட்சி ஆணையர் சுப்பையா, நகராட்சி பொறியாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story