பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 11 Dec 2020 4:37 AM GMT (Updated: 11 Dec 2020 4:37 AM GMT)

பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு (3 ஆண்டுகள்) படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்த நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழில்படிப்பு உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கோரும் மாணவ-மாணவிகள் அதற்கான விண்ணப்பங்களை அவரவர் படிக்கும் கல்வி நிறுவனங்களில் வழங்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.



Next Story