கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு கேரளா வியாபாரிகள் வரவில்லை


கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு கேரளா வியாபாரிகள் வரவில்லை
x
தினத்தந்தி 11 Dec 2020 10:33 AM IST (Updated: 11 Dec 2020 10:33 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல்பாளையம் சந்தைக்கு நேற்று மாடுகள் வரத்து அதிகரித்தது. சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரவில்லை.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 50 வளர்ப்பு கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.

இதை பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் விலை பேசி பிடித்து சென்றனர். நேற்று வழக்கமான சந்தை கூடியது. இதற்கு ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. 450 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

கேரளா வியாபாரிகள் வரவில்லை

இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.45 ஆயிரத்துக்கும் விற்பனையா னது. பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், கர்நாடகா, ஆந்திரா, கோவா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும் விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். இதுகுறித்து சந்தை நிர்வாகி ராஜேந்திரன் கூறும்போது, ‘கடந்த வாரத்தைவிட இந்த வாரம் கூடுதலாக மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. கருங்கல்பாளையம் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீதம் விற்பனையானது. கேரளா மாநிலத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றதால் அந்த மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை’ என்றார்.

Next Story