மதுகுடிக்க பணம் கேட்டு கணவர் தகராறு: காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


மதுகுடிக்க பணம் கேட்டு கணவர் தகராறு: காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Dec 2020 5:28 PM IST (Updated: 11 Dec 2020 5:28 PM IST)
t-max-icont-min-icon

மதுகுடிக்க பணம் கேட்டு கணவர் தகராறு செய்ததால் காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இடிகரை,

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 24). கூலி தொழிலாளி. இவர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த லோகநாயகியை (19) காதலித்து வந்தார். இதற்கு அவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவர்கள் 2 பேரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு அவர்கள் தனலட்சுமி நகரில் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் குருமூர்த்தியின் உறவினர், லோகநாயகியின் தாய் சாந்திக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, உங்கள் மகள் விஷம் குடித்துவிட்டார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறியுள்ளார்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர்களுடன் கோவை வந்தார்.

இதற்கிடையே துடியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு லோகநாயகி சிகிச்சை பெற்று வந்தார். அவரை, சாந்தி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தனர். இதையடுத்து லோகநாயகி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், குருமூர்த்தி மதுகுடிக்க பணம் கேட்டு லோகநாயகியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லோகநாயகிக்கு திருமணம் முடிந்து 5 மாதங் களே ஆவதால் அவருடைய சாவு குறித்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story