சோளிங்கரில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்
சோளிங்கரில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
சோளிங்கர்,
சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி அமுதா (வயது 20). இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. நேற்று காலை வீட்டில் புதுப்பெண் அமுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும், அமுதாவின் தாயார் வள்ளி விரைந்து வந்து, மகளின் பிணத்தைப் பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து தாயார் வள்ளி சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகள் அமுதாவின் சாவில் சந்தேகம் உள்ளது. எனது மகளின் சாவுக்கு மாமியார் விஜயா தான் காரணம், எனத் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் நேரில் வந்து விசாரித்தார். போலீசார், அவரின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் சோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் பெண்ணின் உறவினர்கள் சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நேற்று மாலை அரசு ஆஸ்பத்திரி எதிரே சிறிது நேரம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அமுதாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அங்கிருந்த போலீசார், அவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர்.
யுவராஜிக்கும், அமுதாவுக்கும் திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. ஆனால் திருமணத்தின்போது பெண் வீட்டார் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கவில்லை, எனக் கூறப்படுகிறது. இதனால் அமுதாவின் மாமியார் வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்தது. அவரின் தாயார், வரும் தை மாதம் சீர்வரிசை பொருட்களை வாங்கி கொடுப்பதாக, தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் அமுதாவின் தந்தை சோளிங்கருக்கு வந்து தனது மகள் அமுதாவை பார்த்துச் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் புதுப்பெண் அமுதா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அமுதாவுக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆவதால் ராணிப்பேட்டை சப்- கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story