சந்தனக்கொட்டாய் பகுதியில் கண்ணமங்கலம்-வேலூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


சந்தனக்கொட்டாய் பகுதியில் கண்ணமங்கலம்-வேலூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2020 7:43 PM IST (Updated: 11 Dec 2020 7:43 PM IST)
t-max-icont-min-icon

சந்தனக்கொட்டாய் பகுதியில் கண்ணமங்கலம்-வேலூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சந்தனக்கொட்டாய் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சுங்கச்சாவடி அமைக்கும் பணி தொடங்கி தற்போது நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இரு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது, என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்ளவில்லை. இச்சாலையின் ஒருபுறம் வனத்துறைக்கு சொந்தமான மலைக்காடுகள், மற்றொரு புறம் விவசாய நிலங்களுடன் குடியிருப்புகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் சாலையோரம் உள்ளன.

வருங்காலத்தில் சுங்கச்சாவடிக்காக சாலைகள் விரிவுப்படுத்தும்போது காடுகள், நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அகற்றப்படலாம், என இப்பகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் அச்சம் அடைந்துள்ளனர். இச்சாலை இருவழிச்சாலை என்பதால் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. சுங்கச்சாவடியால் இப்பகுதியில் சாலையோரம் இருந்த பல்வேறு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சுங்கச்சாவடிக்காக சாலையோரம் கடந்த மாதம் அமைக்கப்பட்ட திடீர் தார் சாலை தரமாக இல்லாததால், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் சரிந்து சேதமடைந்து, போக்குவரத்துத் தடை செய்யப்பட்டு உள்ளது. சாலை அமைக்கப்பட்ட ஒரே மாதத்தில் தார் சாலை சேதமடைந்ததைப் பார்த்து அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தச் சுங்கச்சாவடி எங்கள் பகுதிக்கு தேவையில்லை. உடனே அகற்ற வேண்டும், எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே கண்ணமங்கலம்-வேலூர் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடியை சுற்றுப்புறசூழல் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும், எனச் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story