வேலூர் கோட்டை பூங்காவில் இருந்த மர்ம பெட்டியால் பரபரப்பு போலீசார் விசாரணை
வேலூர் கோட்டை பூங்காவில் இருந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் ட்ரோன் கேமராவில் கோட்டையை மர்மநபர்கள் படம் பிடித்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்,
கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் வேலூர் கோட்டையை சுற்றி பார்க்கவும், அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டையில் உள்ள கோவில், தேவாலயத்தில் மட்டும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனால் கோட்டை வெளிப்புறம் அமைந்துள்ள பூங்காவில் பொதுமக்கள் காலை, மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள் இந்த பூங்காவில் அமர்ந்து பொழுதை போக்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பொதுமக்கள் கோட்டை வெளிப்புற பூங்காவில் நடைபயிற்சி சென்றனர். அப்போது அங்குள்ள மரத்தின் அருகே கருப்பு நிறத்தில் மர்ம பெட்டி (சூட்கேட்ஸ்) ஒன்று இருந்தது. பலர் நடைபயிற்சி சென்றதால் யாராவது அதனை வைத்திருப்பார்கள் என்று அனைவரும் நினைத்து கொண்டனர். ஆனால் வெகுநேரமாகியும் அதனை யாரும் எடுக்கவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த பெட்டி குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ட்ரோன் கேமராவில் படம் பிடித்தார்களா?
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அந்த பெட்டியை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில், எந்த பொருட்களும் இல்லை. அந்த பெட்டி ட்ரோன் கேமரா வைக்க வைக்கப்படும் பெட்டி என்று தெரிய வந்தது. அதையடுத்து நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
வேலூர் கோட்டையின் உள்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் யாராவது நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று அதிகாலை ட்ரோன் கேமரா மூலம் கோட்டை மற்றும் அதன் உள்பகுதியை படம் பிடித்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் கோட்டை பூங்காவில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story