வடமதுரையில் பெண் சரமாரி வெட்டிக்கொலை மருமகன் வெறிச்செயல்


வடமதுரையில் பெண் சரமாரி வெட்டிக்கொலை மருமகன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 11 Dec 2020 8:37 PM IST (Updated: 11 Dec 2020 8:37 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரையில் பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை முள்ளாம்பட்டி காலனியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி பொண்ணுபாப்பா (வயது 55). இவர்களது மகள் பூங்கொடி (32). இவருக்கும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள நம்பாகவுண்டனூரை சேர்ந்த கனகராஜ் (40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகள் உள்ளாள். கனகராஜ் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் பொண்ணுபாப்பாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில், அவரது கை, கால்கள் செயலிழந்தன. இதனால் அவர் நடக்க முடியாமலும், வேலைகள் எதுவும் செய்யமுடியாமலும் தவித்தார். இதைத்தொடர்ந்து பூங்கொடி, தனது மகளை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கிருந்து தனது தாயை கவனித்து வந்தார்.

தாயை கவனித்து வந்த பூங்கொடி, கடந்த சில ஆண்டுகளாகவே தனது கணவர் வீட்டிற்கு செல்லாமல் இருந்தார். இதனால் கனகராஜ், தனது வீட்டிற்கு வருமாறு மனைவி அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று கனகராஜ் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பூங்கொடியை அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ், பூங்கொடி வராததற்கு காரணம் மாமியார் பொண்ணுபாப்பா தான் எனக் கூறி அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த பொண்ணுபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் மற்றும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பொண்ணுபாப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.

Next Story