வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் - 150 பேர் கைது
வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி, சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசை கண்டித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சேலத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகர பொருளாளர் காஜா மைதீன், மண்டல பொறுப்பாளர் நாவரசன், மாவட்ட துணை செயலாளர்கள் காயத்ரி, வேலு நாயக்கர், மாநில துணை செயலாளர் அங்கப்பன், கொள்கை பரப்பு துணை செயலாளர் சுந்தர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறிப்பாக பெரியார் மேம்பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பிறகு அவர்கள் கோட்டை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் இழுத்து மூடப்பட்டது. அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நுழைவுவாயில் கதவு மூடப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் ஊழியர்களும், அதிகாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த பிறகு நுழைவுவாயில் திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story