கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால், கணவர் வீட்டின் முன்பு தரையில் உட்கார்ந்து மகனுடன் பெண் தர்ணா; கோபி அருகே பரபரப்பு


எலத்தூரில் மகனுடன் கணவர் வீட்டின் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை படத்தில் காணலாம்
x
எலத்தூரில் மகனுடன் கணவர் வீட்டின் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை படத்தில் காணலாம்
தினத்தந்தி 12 Dec 2020 1:15 AM IST (Updated: 11 Dec 2020 11:02 PM IST)
t-max-icont-min-icon

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் கணவன் வீட்டின் முன்பு தரையில் உட்கார்ந்து பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலாளர்
கோபி அருகே உள்ள எலத்தூரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் அனுப்பூரை சேர்ந்த சுபா என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தக்சினேஷ் (12) என்ற மகன் உள்ளார்.

திருப்பூரில் ஓட்டல் தொடங்க ரூ.10 லட்சம் தேவை என தனது மனைவி சுபாவிடம் ஸ்ரீதர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கேட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து சுபா தனது உறவினர்களிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி வந்து கணவர் ஸ்ரீதரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், சேவூரில் வீடு கட்டுவதற்காக ரூ.25 லட்சம் மனைவி சுபாவின் பெயரில் வங்கியில் ஸ்ரீதர் கடன் பெற்றதாக தெரிகிறது.

தர்ணா
இந்தநிலையில், குடும்ப தகராறு காரணமாக ஸ்ரீதர் தனது மனைவி சுபாவையும், மகன் தக்சினேசையும் பெரம்பலூரில் உள்ள சுபா வீட்டுக்கு விரட்டி விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் சுபாவிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர்.

இதனால் சுபா தன் மகனுடன் எலத்தூர் வந்து ஸ்ரீதரிடம் பணத்தைக் கேட்ட போது, அவரை வீட்டிற்குள் கணவர் மற்றும் உறவினர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால், அவர் தன் மகனுடன் கணவர் ஸ்ரீதர் வீட்டின் முன்பு நேற்று காலை 7 மணி அளவில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் சுபா தன்னுடைய தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், கடத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story