நாளை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு 16 ஆயிரத்து 134 பேர் எழுதுகின்றனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 16 ஆயிரத்து 134 பேர் எழுதுகின்றனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி,
2020-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 16 ஆயிரத்து 134 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதற்காக மாவட்டத்தில் பி.எம்.சி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. கல்லூரி, செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி, காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் கல்லூரி மற்றும் காமராஜ் பள்ளி, ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி, முத்தையாபுரம் சாண்டி பாலிடெக்னிக் மற்றும் கிரேஸ் என்ஜினீயரிங் கல்லூரி, புதுக்கோட்டை டி.டி.டி.ஏ. பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி, வாகைகுளம் அன்னை தெரசா என்ஜினீயரிங் கல்லூரி, சாயர்புரம் போப்ஸ் கல்லூரி ஆகிய 10 மையங்களில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கும், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பிரான்சிஸ் சேவியர்ஸ், லயோலா பள்ளி, புனித மரியன்னை மகளிர் கல்லூரி ஆகிய 3 மையங்களில் பெண் விண்ணப்பதாரர்களுக்கும் எழுத்து தேர்வு நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் வாட்ச் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டுவர அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு வரும்போது அழைப்பு கடிதம், அடையாள அட்டை, பரீட்சை அட்டை, கருப்பு அல்லது நீல நிற பந்துமுனை பேனா கொண்டு வரவேண்டும். மேலும் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் இந்த தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தேர்வின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி சுப்பையா, அலுவலக கண்காணிப்பாளர் மயில்குமார், கணேசபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story