விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி - விவசாயி கைது
விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டு யானை இறந்தது. இதுதொடர்பாக விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல், கரும்பு, தென்னை போன்றவற்றை பயிரிட்டு உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு அடிக்கடி வரும் வனவிலங்குகள் இரை தேடி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்லக்குட்டி (வயது 75) என்பவர், மலையடிவார பகுதியான வடக்கு கோதையாறு வனப்பகுதியில் அருணாசலபுரம் மொட்டைகுண்டு பகுதியில் உள்ள தனது நிலத்தில் நெல், கரும்பு பயிரிட்டு இருந்தார். மேலும், அங்கு வனவிலங்குகள் புகாத வகையில், அந்த நிலத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்து இருந்தார்.
நேற்று அதிகாலையில் மலையடிவாரத்தில் இருந்து காட்டு யானைக்கூட்டம் இரை தேடி விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. அப்போது செல்லக்குட்டியின் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஒரு பெண் யானை பரிதாபமாக இறந்தது. இதையடுத்து மற்ற யானைகள் பிளிறியவாறு வனப்பகுதிக்கு திரும்பி சென்றன.
காலையில் விவசாய நிலங்களுக்கு சென்ற விவசாயிகள், அங்கு மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாபநாசம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார், பாபநாசம் வனச்சரகர் பாரத் மற்றும் வனத்துறையினர், விக்கிரமசிங்கபுரம் போலீசார், வருவாய் துறையினர், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து ஆம்பூர் அரசு கால்நடை ஆஸ்பத்திரி டாக்டர் சிவமுத்து, வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த யானை 40 வயதானது என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மின்வேலியில் சிக்கி யானை இறந்தது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விவசாயி செல்லக்குட்டியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story