தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீர் - அகற்றும் பணியை விரைவுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை


தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீர் - அகற்றும் பணியை விரைவுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Dec 2020 3:45 AM IST (Updated: 12 Dec 2020 12:27 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அதை அகற்றும் பணியை விரைவுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. பல இடங்களில் மழைநீர் வெளியேற வடிகால் இல்லாததால், தண்ணீர் தொடர்ந்து வடியாமல் உள்ளது.

அதே நேரத்தில் மெயின் ரோடுகள் மற்றும் வடிகால் வசதி உள்ள இடங்களில் தேங்கி கிடந்த தண்ணீர் வேகமாக வடிந்து வருகிறது. அதன்படி அக்சார்பெயிண்ட் சந்திப்பு பகுதியில் திருச்செந்தூர் ரோட்டில் தேங்கி இருந்த மழைநீர் வடிந்து உள்ளது. இதேபோன்று பல இடங்களில் தண்ணீர் வடியத்தொடங்கி உள்ளது.

மேலும், பழைய மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிரே உள்ள பஜார் வழியாக கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதனால் அந்த பகுதியிலுள்ள கடைகளை அகற்றுவதற்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி சுமார் 30 கடைகள் அகற்றப்படுகின்றன. தொடர்ந்து வடிகால் தூர்வாரப்பட உள்ளது.

இதேபோன்று வடிகால் வசதி இல்லாத இடங்களில் மோட்டார்கள் மூலம் தொடர்ந்து தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைவுபடுத்தி முழுமையாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story