அணைக்கட்டு பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் மரணம்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்


வெங்கடேசன், எல்லை பாதுகாப்பு படைவீரர்
x
வெங்கடேசன், எல்லை பாதுகாப்பு படைவீரர்
தினத்தந்தி 12 Dec 2020 12:53 AM IST (Updated: 12 Dec 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் மரணம் அடைந்தார். அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

எல்லை பாதுகாப்பு படை வீரர்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா இலவம்பாடியை அடுத்த தார்வழி கொல்லைமேட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). இவர் திரிபுரா மாநிலம் அகர்தலா என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆனந்தி (34) என்ற மனைவியும், கோபிகா (13), கார்த்திகா (11) என்ற மகள்களும், தேவா (5) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மாதம் வெங்கடேசன் தீபாவளிக்கு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி பணியில் இருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக உடன் இருந்த வீரர்கள், அவரை அகர்தலா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பணியின்போது மரணம்
பின்னர் மேல்சிகிச்சைக்காக திரிபுராவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந் தேதி மாலை 2 மணிக்கு வெங்கடேசன் இறந்துவிட்டார். இதுகுறித்து உயர் அதிகாரிகள் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் பெங்களூருவில் உள்ள தலைமை இடத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து எல்லை பாதுகாப்பு படை அதிகாரி உள்பட 11 வீரர்கள் வெங்கடேசன் உடலை கொண்டுவந்து, அவரது சொந்த ஊரான கொல்லைமேட்டில் உறவினரிகளிடம் நேற்று காலை 9 மணிக்கு ஒப்படைத்தனர்.

உடலை பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து பகல் 1 மணிக்கு பாதுகாப்பு படை வீரர்களின் இசை வாத்தியம் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Next Story