கடையநல்லூர் அருகே, மின்வேலியில் சிக்கி இறந்த தொழிலாளியின் உடல் தோண்டி எடுப்பு


கடையநல்லூர் அருகே, மின்வேலியில் சிக்கி இறந்த தொழிலாளியின் உடல் தோண்டி எடுப்பு
x
தினத்தந்தி 12 Dec 2020 3:45 AM IST (Updated: 12 Dec 2020 12:55 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே மின்வேலியில் சிக்கி இறந்த தொழிலாளியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அச்சன்புதூர், 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 40). கட்டிட தொழிலாளியான இவர் மாடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 8-ந் தேதி மேய்ச்சலுக்கு சென்ற தனது மாடு திரும்பி வராததால், அதனைத் தேடி இரவில் மகேஷ் காட்டு பகுதிக்கு சென்றார்.

அப்போது பக்கத்து ஊரான கம்பனேரி புதுக்குடி கிராமத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்ட தோட்டத்துக்கு சென்றார். அங்கு காட்டுப்பன்றிகள் புகாத வகையில், தோட்டத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அதனைக் கவனிக்காத மகேஷ் அந்த வழியாக சென்றபோது, மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே மகேஷ் இறந்தது குறித்து கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், அவரது உடலை உறவினர்கள் மயானத்தில் புதைத்தனர். இதுகுறித்து அறிந்த கம்பனேரி புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் மாசானம் அளித்த புகாரின் பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மகேசின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று மதியம் கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், மகேசின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அவரது உடலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மகேசின் உடலை மீண்டும் அந்த இடத்திலேயே புதைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story