நெல்லையில் வாலிபர் கொலை: தலைமறைவான தந்தை-மகனை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைப்பு
நெல்லையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான தந்தை-மகனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை பழைய பேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மகன் காளிராஜ் (வயது 25). இவர் பாளையங்கோட்டை ரகுமத் நகரில் ஒரு வீட்டில் மனைவி மேகலாவுடன் வசித்து வந்தார். அங்கு காளிராஜ் கேபிள் டி.வி. ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு காளிராஜ் சாந்திநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்மநபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட காளிராஜின் தந்தை சங்கரனும், மேகலாவின் தந்தை இசக்கிமுத்துவும் அண்ணன்-தம்பி ஆவர். கடந்த ஓராண்டுக்கு முன்பு காளிராஜ் தன்னுடைய சித்தப்பா இசக்கிமுத்துவின் மகளான மேகலாவை (24) திருமணம் செய்து கொண்டார். அண்ணன்-தங்கை உறவுமுறையை மறந்து காளிராஜ்-மேகலா திருமணம் செய்தது, இசக்கிமுத்து குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் காளிராஜ் தன்னுடைய மனைவி மேகலாவுடன் வெளியூரில் வசித்து வந்தார். பின்னர் மீண்டும் நெல்லைக்கு திரும்பிய அவர்கள் பாளையங்கோட்டை ரகுமத் நகரில் வசித்தனர். இதையடுத்து ஆத்திரத்தில் இருந்த இசக்கிமுத்துவின் குடும்பத்தினர் காளிராஜின் நடமாட்டத்தை கண்காணித்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். அதன்படி நேற்று முன்தினம் காளிராஜை வழிமறித்து வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தன.
இதற்கிடையே கொலை நடந்த இடத்தின் அருகில் உள்ள கடையின் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் இசக்கிமுத்து உள்ளிட்டவர்கள் காளிராஜை வெட்டிக் கொலை செய்தது பதிவாகி இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து தலைமறைவான இசக்கிமுத்து மற்றும் அவருடைய மகன் உள்ளிட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்வதற்காக போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களிலும் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story