விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் நாளை கடை ஞாயிறு பெருவிழா- சிம்மகுளத்தில் நீராட தடை; இணையதள வழி மூலம் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி
விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் நாளை கடைஞாயிறு விழாவில் சிம்மகுளம் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையவழி மூலம் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைஞாயிறு திருவிழா
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பெற்ற கார்த்திகை கடைஞாயிறு விழா நாளை நடக்கிறது. கோவிலில் விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை திடீரென உதவி கலெக்டர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
இணையவழி மூலம் மட்டுமே அனுமதி
அப்போது அவர் கூறுகையில், “12-ந் தேதி (அதாவது இன்று) நள்ளிரவில் திறக்கப்படும் சிம்ம குளம், சூரிய தீர்த்தம் மற்றும் பிரம்ம குள தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வரும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் பொது தரிசனம் செய்ய இணைய தள வழி மூலம் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளது. மேற்படி தரிசனம் ஒரு மணி நேரத்துக்கு 180 பக்தர்கள் வீதம் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பக்தர்கள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் 65 வயதுக்கு மேல் உள்ள வயதானவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கூடாது.
கடை வைக்க தடை
வியாபாரிகள் சாலை ஓரங்களில் கடைகள் நடத்துவதை அனுமதிக்க கூடாது என்றும் பொதுமக்களுக்கு கோவிலுக்கு உட்பகுதி மற்றும் வெளி பகுதிகளில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க கூடாது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் பூக்கள் ஆகியவற்றை எடுத்து வர அனுமதி மறுக்கப்படுகிறது. விபூதி மற்றும் குங்குமம் போன்ற எந்தவித பிரசாதங்களும் பக்தர்களுக்கு வழங்கக்கூடாது. முகக்கவசம் அணியாத எவரையும் அனுமதிக்கக் கூடாது என கோவில் நிர்வாகிகளுக்கு கோட்டாட்சியர் கணேஷ் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், அணைக்கட்டு தாசில்தார் சரவணமுத்து, மார்க்கபந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story