வாக்காளர் பட்டியலில் அதிக வாக்காளர்களை சேர்க்க ‘செல்பி வித் பி.எல்.ஓ.’ போட்டி; ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில், ‘செல்பி வித் பி.எல்.ஓ.’ போட்டி மூலம் வாக்காளர் பட்டியலில் அதிக வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
‘செல்பி வித் பி.எல்.ஓ.’
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் இளம் வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க, அவர்களை கவரும் வகையில் ராணிப்பேட்டை நிர்வாகம் ‘செல்பி வித் பி.எல்.ஓ’ என்ற போட்டியை நடத்துகிறது.
இந்தப் போட்டியில் பங்குபெற புதிதாக பதிவு செய்யும் 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர், ஒரு குழுவாக தங்களின் நண்பர்களை சிறப்பு முகாம் நடைபெறும் மையங்களுக்கு அழைத்துச் சென்று, தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் அளித்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் (பி.எல்.ஓ.) நண்பர்கள் குழுவோடு அழகிய ஒரு செல்பி புகைப்படத்தினை எடுக்க வேண்டும்.
சிறப்பு பரிசு
அந்த படத்தினை 9080820575 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தனது குழுவோடு சிறப்பு முகாம் நடைபெறும் மையத்திற்கு சென்று செல்பி படம் எடுத்த ஒரு இளம் வாக்காளரை சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்படும்.
மேலும் அதிகமான இளம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்து, சிறப்பு பரிசு வழங்கப்படும்.
இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story