கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு டிராவல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை; தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு டிராவல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
டிராவல்ஸ் உரிமையாளர்
கரூர் பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43). இவருக்கு சுதா(37) என்கிற மனைவியும், சிவபிரியா, செல்வபிரியா(16) என்ற இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். பாஸ்கர், சொந்தமாக வேன்களை வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேன்களை யாரும் அழைக்காததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும், வாகன செலவுகள் மற்றும் குடும்ப தேவைகளுக்கும் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வெளியில் கொடுத்து வைத்திருந்த பணமும் சரியாக வரவில்லையாம். இதனால் பாஸ்கர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
தீக்குளித்து தற்கொலை
தற்போது ஊரடங்கில் இருந்து பெருமளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், பாஸ்கர் வெளியூருக்கு சவாரி சென்று விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர், தாந்தோணிமலையில் உள்ள கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென வேனை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். பின்னர் தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பாஸ்கர் ஓட்டி வந்த வேனை போலீசார் கைப்பற்றி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு டிராவல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவர் கைது
இந்தநிலையில், பாஸ்கர் ஓட்டி வந்த வேனில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் கரூரை சேர்ந்த பஸ் கூண்டு கட்டும் நிறுவனத்தில் வேனை வேலைக்கு விட்டதோடு, அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்ததாகவும், ஆனால் அதற்கான வேலையை செய்யாமலும், பணத்தையும் திருப்பி தராமல் உரிமையாளர் ஏமாற்றி விட்டார் என்று எழுதப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் பஸ் கூண்டு கட்டும் நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story