மீஞ்சூர் அருகே, மானை வேட்டையாடி ஜீப்பில் கடத்திய 2 பேர் பிடிபட்டனர் - துப்பாக்கி பறிமுதல்
மீஞ்சூர் அருகே காட்டுப்பகுதியில் மானை வேட்டையாடி ஜீப்பில் கடத்தி வந்த 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் அமைக்கப்பட்டதால் காடுகள் அழிக்கப்பட்டது. இந்த காடுகளில் இருந்து காட்டெருமைகள், மான்கள், குரங்குகள் உள்பட அரியவகை விலங்குகள் வாழ்ந்த நிலையில் அவை இடம்பெயர ஆரம்பித்தன.
மேலும் தற்போது உள்ள முட்செடி பகுதிகளில் மான்கள் தற்போது வசித்து வருகின்றன. இங்குள்ள உப்பங்கழி பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களில் வழித்தவறி வரும் மான்களை மர்ம ஆசாமிகள் வேட்டையாடி கடத்தி செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கொரஞ்சூர்ரெட்டிபாளையம் செல்லும் சாலையில் மீஞ்சூர் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்குள்ள சாலையில் வேகமாக வந்த ஜீப்பை நிறுத்தி போலீசார் சோதனையிட்ட போது, அதில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆண் மான் மற்றும் துப்பாக்கி, 12 துப்பாக்கி குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அதில் இருந்த 2 பேரை பிடித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர்கள் சென்னை பெரம்பூரில் ஆயில் கடை நடத்திவரும் எருக்கஞ்சேரியை சேர்ந்த நரசிம்மன் (வயது 54), லாரி டிரைவர் நாகராஜ் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் நிலையத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் பறி முதல் செய்த மான், துப் பாக்கி, 12 துப்பாக்கி குண்டுகள், ஜீப் ஆகியவற்றை ஒப்படைத்தனர். இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் மான் வேட்டையாடியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story