கலப்பட மருத்துவ முறைக்கு எதிர்ப்பு; டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்
கலப்பட மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தில் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
எதிர்ப்பு
இந்தியாவில் ஆயுர்வேத, சித்தா, யுனானி மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்களை போல 58 வகையான அறுவை சிகிச்சைகளை செய்வதற்கு அனுமதி அளித்து மத்திய அரசு புதிய திட்டத்தினை கொண்டுவந்துள்ளது. அலோபதி முறையிலான அறுவை சிகிச்சைகளை எந்தவித பயிற்சியும் இல்லாமல் ஆயுஷ் மருத்துவர்கள் மேற்கொண்டால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அலோபதி மருத்துவர்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் என்று கடந்த 8-ந் தேதி அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் இந்தியா முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்த விளக்கக்கூட்டம் ராமநாதபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் அரவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆனந்தசொக்கலிங்கம் வரவேற்றார். மாநில நிர்வாகி டாக்டர் சின்னத்துரை அப்துல்லா போராட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.
பயிற்சி
அப்போது டாக்டர்கள் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் 150 பெரிய மருத்துவமனைகள் உள்பட 500 தனியார் கிளினிக்குகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அங்கு பணிபுரியும் 500 டாக்டர்கள் 12 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அலோபதி நவீன மருத்துவத்தையும், பாரம்பரிய மருத்துவத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும். பாரம்பரிய மருத்துவர்கள் 6 மாத பயிற்சி பெற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் 11 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்று அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார். இப்படிப்பட்ட மருத்துவ துறையில் கலப்பட மருத்துவம் என்பது தவறான பாதைக்கு அழைத்து செல்லும். நவீன மருத்துவம் தவிர மற்ற மருத்துவத்தில் மயக்கவியல் துறையே கிடையாது. அப்படி இருக்கும்போது எப்படி அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும்.
போராட்டம்
நாங்கள் பாரம்பரிய மருத்துவத்தை எதிர்க்கவில்லை. அவரவர் படித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து. உத்தரபிரதேசத்தில் 8 ஆயிரம் பேருக்கு ஒருவரும் பீகாரில் 6 ஆயிரம் பேருக்கு ஒருவரும் டாக்டராக உள்ளனர். ஆனால், தமிழகத்தில் 254 பேருக்கு ஒரு டாக்டர் உள்ளனர். உலக அளவில் மருத்துவ துறையில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு மத்திய அரசின் புதிய சட்டத்தினால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ சுற்றுலா போன்ற சிறப்பு வாய்ந்த திட்டங்கள் பாதிக்கப்படும். தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு கூறினர். இதில் டாக்டர்கள் மதுரம் அரவிந்தராஜ், பாத்திமா சின்னதுரை, திருமலைவேலு, சுப்பிரமணியன், ஆசிக்அமீன், பரணிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story