போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி மோசடி: உகாண்டா நாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது - போலீஸ் ஐ.ஜி. சீமந்த்குமார் சிங் பேட்டி


போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி மோசடி: உகாண்டா நாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது - போலீஸ் ஐ.ஜி. சீமந்த்குமார் சிங் பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2020 3:30 AM IST (Updated: 12 Dec 2020 5:41 AM IST)
t-max-icont-min-icon

போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்ட உகாண்டா நாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் ஐ.ஜி. சீமந்த்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

துமகூரு,

துமகூரு மாவட்டத்தில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தது. இந்த மோசடியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், துமகூரு சைபர் கிரைம் தனிப்படை போலீசார், போலி ஏ.டி.எம்.கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்களின் பணத்தை எடுத்து வந்த 2 வாலிபர்களை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து துமகூருவில் நேற்று மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சீமந்த்குமார் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

துமகூருவில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி மர்மநபர்கள் எடுத்து வருவது தொடர்பாக வந்த புகார்களின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக உகாண்டா நாட்டை சேர்ந்த ஜவான் காபோங்க், லாரன்ஸ் மாகாமு ஆகிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் ஏ.டி.எம். மையங்களில் இருக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவார்கள்.

பின்னர் அந்த கேமராவில் பணம் எடுக்கும் நபர்களின் ஏ.டி.எம். கார்டுகள் பற்றிய தகவல்கள் பதிவாகும் காட்சிகள் மூலம், போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பார்கள். அந்த போலி கார்டுகள் மூலம் ஏ.டி.எம். மையத்தில் இருந்து பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து 2 வாலிபர்களும் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுவரை போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி ரூ.25 லட்சம் வரை எடுத்து மோசடியில் ஈடுபட்டது 2 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துமகூரு மட்டும் இன்றி பெங்களூரு, சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து, பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த மோசடிக்கு, டெல்லி மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேர் உதவி செய்துள்ளனர். அவர்கள் தலைமறைவாக உள்ளனர். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக 2 வாலிபர்களும் போலி ஏ.டி.எம்.கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு இருந்தார்கள். துமகூருவில் உள்ள ஏ.டி.எம். மையங்கள், அதை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் இருந்து 20 போலி ஏ.டி.எம். கார்டுகள், செல்போன்கள், நவீன கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜவான் காபோங்க், லாரன்ஸ் மாகாமு ஆகிய 2 பேரும் கைதாகி இருப்பதன் மூலம் துமகூரு மாவட்டம், பிற போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 60 மோசடி வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா உடன் இருந்தார்.

Next Story