பழனி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்


பழனி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்
x
தினத்தந்தி 12 Dec 2020 3:40 PM IST (Updated: 12 Dec 2020 3:40 PM IST)
t-max-icont-min-icon

திருமண உதவித்தொகை பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கூறி பழனி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பழனி, 

தமிழகத்தில், ஏழை-எளிய இளம்பெண்களுக்கு திருமண உதவித் தொகை திட்டம் சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு ரூ. 25ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம், பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் தங்கம் வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அதிகாரிகளால் பெறப்பட்டு சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டபின் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று பழனி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழனி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், திருமண உதவித்தொகை பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த முற்றுகை போராட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, பொய்யான புகார் கூறி போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் பழனி ஒன்றிய அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story