நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் பறிமுதல்
நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1¾ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்,
தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வாகனங்களுக்கு எண் பதிவு பெறுதல், வாகனங்களுக்கு தரம் புதுப்பித்தல்(எப்.சி) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், அருள்பிரியா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேற்று மாலை வந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 70 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 70-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மற்றும் அலுவலர் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story