ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு: தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம் - புறநோயாளிகள் பாதிப்பு
ஆயுர்வேத டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய மத்தியஅரசு வழங்கிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர்,
ஆயுர்வேத டாக்டர்களுக்கும் அலோபதி முறையில் அறுவை சிகிச்சை செய்யலாம் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அறிவிப்பை மத்தியஅரசு திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்கில் நேற்றுகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. அவசர சேவையை தவிர இதர சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதனால் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 150 தனியார் மருத்துவமனைகள், 1,500 கிளினிக்கில் பணியாற்றும் 1,500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இந்தநிலையில் தஞ்சையில் இந்திய மருத்துவ சங்கத்தின் தஞ்சை கிளை நிர்வாகிகள ஆலோசனை கூட்டம் நடந்தது.
பின்னர் தஞ்சை கிளை தலைவர் மாரிமுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற ஒரு அபாயகரமான அறிவிப்பை மத்தியஅரசு கடந்த மாதம் வெளியிட்டது.
இதனால் மருத்துவ துறைகளுக்கான கலப்படம் ஏற்பட்டு மக்களிடையே மிகப்பெரிய குழப்பம் ஏற்படும். ஆயுர்வேத மருத்துவ முறையில் அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகளும், வலி நிவாரணிகளும் இல்லாத காரணத்தால் இது நோயாளிகளுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி உயிர் இழப்புகளையும் உண்டாக்கலாம்.
நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆயுர்வேதம் மற்றும் ஆயுஷ் மருத்துவ முறைகள் இந்த அரசு ஆணையால் அதன் தனித்துவத்தையும் இழந்துவிடும். சரியான பயிற்சியும், அறுவை சிகிச்சைக்கு தேவையான அடிப்படை அனுபவமும் இல்லாமல் ஆயுர்வேத டாக்டர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் அது உயிரிழப்புகளையும், தேவையில்லாத மருத்துவ சிக்கல்களையும் ஏற்படுத்தும். மருத்துவத்துக்கான செலவினங்களையும் அதிகப்படுத்திவிடும்.
இதனால் உலக அளவில் நம் நாட்டின் மருத்துவதுறையின் மீதும், மருத்துவர்களின் மீதும் உள்ள நன்மதிப்பு குறைந்து நம் நாட்டின் பொருளாதாரம் மேலும் சீர்கெட காரணமாக அமையும். மத்தியஅரசின் இந்த அறிவிப்பால் மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மக்களின் சுகாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கி, நோயாளிகளின் உயிரோடு விளையாடக்கூடிய இந்த அபாயகரமான அரசு ஆணையை உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது செயலாளர் நல்லதம்பி, துணைச் செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சசிராஜ், முன்னாள் தலைவர் சிங்காரவேலு, செயற்குழு உறுப்பினர் பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story