4,200 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் சான்றிதழ்கள் - கலெக்டர் தகவல்


4,200 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் சான்றிதழ்கள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Dec 2020 6:30 PM IST (Updated: 12 Dec 2020 6:30 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 4,200 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

ஊட்டி, 

ஆண்டுதோறும் டிசம்பர் 11-ந் தேதி சர்வதேச மலை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி மரக்கன்று நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.

தொடர்ந்து இயற்கை விவசாயம் குறித்த அடிப்படை தொழில்நுட்பங்களை அறிய ஆர்கானிக் நீல்கிரீஸ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தார். தொடர்ந்து 4 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயி விருதான ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள், ஒரு விவசாய குழுவுக்கு சிறந்த விவசாய குழு விருதான ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பேசினார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது.

நீலகிரி மாவட்டம் இந்தியாவில் முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக திகழ்கிறது. இதன் வளத்தை பாதுகாக்க கிராமபுறங்களில் 21 வகையான 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்ற 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து மண் வளத்தை மேம்படுத்தி இயற்கை மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் நிலம் தயாரிப்பதில் இருந்து அறுவடை செய்யும் வரை உள்ள அடிப்படை விவரங்களை இந்த புதிய செயலியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு செல்போன் வைத்து உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

நீலகிரியில் 4 ஆயிரத்து 800 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 200 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள 70 ஆயிரம் விவசாயிகளும் இயற்கை வேளாண் விவசாயிகளாக மாற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம், உதவி இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், சுரேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story