உளுந்தூர்பேட்டை அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து; நோயாளி பலி மனைவி உள்பட 3 பேர் படுகாயம்


உளுந்தூர்பேட்டை அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து; நோயாளி பலி மனைவி உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Dec 2020 7:18 PM IST (Updated: 12 Dec 2020 7:18 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த மனைவி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 58). ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவரை உறவினர்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பாஸ்கரன் அந்த தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் அவருடைய மனைவியும், அரசு பள்ளி ஆசிரியையுமான சுந்தரி(55), உறவினர் மணிகண்டன்(39) ஆகியோரும் சென்றனர். ஆம்புலன்சை பக்ரூதின் ஓட்டினார்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பியன்மாதேவி என்னும் இடத்தில் வந்தபோது, முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மீது மோதுவது போல் வந்தது. இதைபார்த்த டிரைவர் பக்ரூதின் ஆம்புலன்சை நிறுத்த பிரேக் போட்டுள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்சில் வந்த நோயாளி பாஸ்கரன், இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுந்தரி, மணிகண்டன், ஆம்புலன்ஸ் டிரைவர் பக்ரூதின் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரித்தனர். பின்னர் பலியான பாஸ்கரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை பெற ஆம்புலன்சில் சென்ற நோயாளி, இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story