குந்தாரப்பள்ளி அருகே பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை - போலீசார் விசாரணை


குந்தாரப்பள்ளி அருகே பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Dec 2020 9:00 PM IST (Updated: 12 Dec 2020 9:00 PM IST)
t-max-icont-min-icon

குந்தாரப்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

குருபரப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 50). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி நாகலட்ணீசுமி (45). இவர்களுக்கு பிரதீப் (25) என்ற மகன் உள்ளார். இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். நாராயணன் தற்போது செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இதனால் வீட்டில் அவரது மனைவி நாகலட்சுமியும், மகன் பிரதீப்பும் இருந்து வந்தனர். இவர்களது வீடு ராமாபுரத்தில் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. நாகலட்சுமி தனது வீட்டின் மாடியில் உள்ள 2 அறைகளில் ஒன்றை வாடகைக்கு விட்டுள்ளார். மற்றொரு அறை காலியாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை நாகலட்சுமி காலியாக உள்ள அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அதேபோல கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட நாகலட்சுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது நாகலட்சுமியின் உடல் கிடந்த இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே கொலை குறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினார்கள். இதைத்தொடர்ந்து நாகலட்சுமியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கீழ்தளத்தில் குடியிருந்து வரும் நாகலட்சுமி இரவு நேரத்தில் எதற்காக மாடியில் உள்ள காலி அறைக்கு சென்றார்?, அந்த நேரத்தில் அவரை கொலை செய்தது யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story