பழங்குடியினர் நல உண்டு, உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் மெகராஜ் தகவல்


பழங்குடியினர் நல உண்டு, உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் மெகராஜ் தகவல்
x
தினத்தந்தி 12 Dec 2020 9:26 PM IST (Updated: 12 Dec 2020 9:26 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முறையாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு ரூ.10 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு ரூ.9 ஆயிரம் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ரூ.8 ஆயிரம் என்ற தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கு தகுதியுள்ள பழங்குடியினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடர்புடைய பாடத்தில் முதுகலைப்பட்டம் மற்றும் கல்வியியல் இளங்கலை பட்டமும் (பி.எட்.), பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடர்புடைய பாடத்தில் இளங்கலைப்பட்டம் மற்றும் கல்வியியல் இளங்கலை பட்டமும் (பி.எட்.), இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் பயிற்சிக்கான பட்டய படிப்பும் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியிடம் பெற்று, முழுமையாக பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்களுடன் வருகிற 24-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் அளிக்க வேண்டும். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆங்கிலம்-1, வேதியியல்-1, உயிரியல்-2, பொருளியல்-2, கணினி பயிற்றுனர்-1, பட்டதாரி ஆசிரியர் நிலையில் கணிதம்-1 அறிவியல்-2 சமூக அறிவியல்-2, இடைநிலை ஆசிரியர்-1 என மொத்தம் 13 பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும்.

இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பழங்குடியினர் நல இயக்குனர் முன்னிலையில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, வகுப்பு நடத்துதல் தேர்வு நடத்தப்பட்டு நிரப்படும். எனவே நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின இன பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story