திருட்டு வழக்கில் பிடிக்க சென்றபோது போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய கொள்ளையன் கைது - சுரண்டை அருகே பரபரப்பு
சுரண்டை அருகே திருட்டு வழக்கில் பிடிக்க சென்றபோது போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
சுரண்டை,
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர்வடகரையை அடுத்த ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் வனராஜ். இவருடைய மகன் பால்தினகரன் (வயது 30). இவர் மீது சாம்பவர்வடகரை, பாவூர்சத்திரம், கொடைக்கானல், வத்தலகுண்டு, மதுரை, சிவகாசி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 15-க்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தென்காசி அருகே ஈனாவிலக்கு பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரது செல்போன் கடையின் பூட்டை மர்மநபர்கள் உடைத்து திறந்து செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், கொள்ளையர்களை பிடிப்பதற்காக, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிஷாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொள்ளையில் பால்தினகரனுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட தனிப்படை போலீசார், அவரை பிடித்து விசாரிக்க திட்டமிட்டனர். இதற்காக நேற்று அதிகாலை 5 மணி அளவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிஷாந்த் தலைமையில், போலீஸ்காரர் சக்திவேல் உள்ளிட்ட தனிப்படை போலீசார் ஊர்மேலழகியான் கிராமத்தில் உள்ள பால் தினகரனின் வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் அவரது வீட்டின் கதவை தட்டி பால் தினகரனை எழுப்பினர். தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு பால்தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவரை மடக்கி பிடிக்க போலீசார் முயன்றனர்.
அப்போது பால்தினகரன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென்று போலீஸ்காரர் சக்திவேலின் தலையில் வெட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து வெளியே தப்பி ஓடினார். போலீசார் அவரை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனாலும் பால்தினகரன் காட்டுப்பகுதி வழியாக இருளில் தப்பி ஓடி விட்டார்.
அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் சக்திவேலை சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து தலைமறைவான பால்தினகரனை பிடிப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆய்க்குடி சுடுகாட்டு பகுதியில் பதுங்கி இருந்த பால் தினகரனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சுரண்டை அருகே போலீஸ்காரரை கொள்ளையன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story