வங்கி கணக்கு-ஏ.டி.எம்.கார்டு எண்ணை வாங்கி கொரோனா நிவாரணம் தருவதாக நூதன மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கொரோனா நிவாரணம் வாங்கி தருவதாக வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண் ஆகியவற்றை பெற்று மக்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொரோனாவை வைத்து மோசடி
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியது. இதற்கு ஏராளமானோர் பலியாகினர். இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் தொழில் பாதிக்கப்பட்டு, மக்கள் வேலையிழந்து பொருளாதார ரீதியாக பின்தங்கி விட்டனர். இதற்கிடையே கொரோனாவை வைத்தும் சிலர் மோசடியில் இறங்கி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள், திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குறிப்பிட்ட சில செல்போன் எண்களில் இருந்து, பொதுமக்களுக்கு அழைப்பு வருகிறது. எதிர்முனையில் பேசும் நபர், தன்னை மத்திய அரசு அதிகாரி என்று அறிமுகம் செய்து கொள்கிறார். பின்னர் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விவரிக்கிறார். இதனால் அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது.
நிவாரணத்தொகை
இதையடுத்து மக்களின் பொருளாதாரத்தை மீட்பதற்கு, பிரதமரின் கொரோனா நிவாரணத்தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அந்த நிவாரணத்தொகைக்கு உங்களை தேர்வு செய்துள்ளோம். அடுத்த சில மணி நேரத்தில் வங்கி கணக்கில் தொகை செலுத்தப்படும் என்று கூறுகிறார். அதை உண்மை என நம்பி ஆர்வமாக பேசும் மக்களிடம், மர்ம நபர்கள் நைசாக பேசி வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், 3 இலக்க சி.வி.வி. எண் ஆகியவற்றை வாங்கி விடுகின்றனர்.
அதை வைத்து மக்களின் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் பணத்தை முறைகேடாக எடுத்து விடுகின்றனர். மக்கள் பணத்தை பறி கொடுத்த பின்னரே விழிப்படைந்து புகார் கொடுக்கின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 30-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேநேரம் பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய எண் போன்றவற்றை யாரிடமும் கொடுக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story