மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 143 வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 143 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தூத்துக்குடி,
தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட நீதிபதி (பொறுப்பு) குமார் சரவணன் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், திருச்செந்தூரில் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் தலா ஒரு அமர்வுகளும் என மொத்தம் 12 அமர்வுகளில் விசாரணை நடந்தது.
இதில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட 997 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமா, நிரந்தர மக்கள் கோர்ட்டு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான உமா மகேசுவரி, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி பாஸ்கர், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி ஆப்ரீன் பேகம், 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு உமாதேவி, 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சக்திவேல், 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராஜ குமரேசன் மற்றும் காப்பீட்டு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில் 4 வங்கி வராக்கடன் வழக்குகளில் ரூ.8 லட்சத்து 10 ஆயிரமும், கோர்ட்டில் நிலுவையில் உள்ள 139 வழக்குகளில் ரூ.2 கோடியே 70 லட்சத்து 50 ஆயிரத்து 894-ம் என மொத்தம் 143 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 78 லட்சத்து 60 ஆயிரத்து 894 பைசல் செய்து தீர்வு காணப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சப்-கோர்ட்டு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் செய்து இருந்தார்.
கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. சார்பு நீதிமன்ற நீதிபதி அகிலாதேவி தலைமை தாங்கினார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 301 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 10 சிவில் வழக்குகள், 7 காசோலை மோசடி வழக்குகள், 3 வங்கி வரா கடன் வழக்குகள், 2 வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், ஒரு குடும்ப வழக்கு என்று மொத்தம் 23 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
சிவில் வழக்கில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம், காசோலை வழக்கில் ரூ.15 லட்சத்து 46 ஆயிரத்து 766, வங்கி வராக்கடன் வழக்கில் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம், வாகன விபத்து வழக்கில் ரூ.12 லட்சத்து 26 ஆயிரம் என மொத்தம் ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்து 766 பைசல் செய்யப்பட்டது. இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், நீதிபதிகள் சுப்பிரமணியன், பர்வதராஜ் ஆறுமுகம், அரசு வக்கீல் சந்திரசேகர், தாசில்தார் மணிகண்டன் மற்றும் வக்கீல்கள், வங்கி அதிகாரிகள், இன்சூரன்ஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிபதி ரமேஷ் தலைமையில் நடந்தது. குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன் முன்னிலை வகித்தார். அரசு வக்கீல் கல்யாண்குமார் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதில் 32 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 6 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story