காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான முகாம் - இன்றும் நடக்கிறது


காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான முகாம் - இன்றும் நடக்கிறது
x
தினத்தந்தி 13 Dec 2020 3:45 AM IST (Updated: 13 Dec 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான முகாம் நேற்று நடைபெற்றது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் நேற்று வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், காஞ்சீபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையர் அதுல் ஆனந்த் மேல்படப்பையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியிலும், செரப்பனஞ்சேரியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியிலும் உள்ள வாக்குசாவடி மையங் களை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மா.நாராயணன், வருவாய் கோட்டாட்சியர்கள் வித்யா மற்றும் திவ்யஸ்ரீ, வட்டாட்சியர்கள் முத்து, நிர்மலா, தேர்தல் வட்டாட்சியர் ச.ரபீக், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, பெயர் நீக்கல் சேர்த்தல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பணிகளை நேற்று தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள், செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாம்பரம் தாசில்தார் சரவணன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். அவருடன் பூந்தமல்லி தாசில்தார் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். மேற்படி சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3 மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.

Next Story