பெரம்பலூரில் பட்டப்பகலில் பயங்கரம்: மது பாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை நண்பர் போலீசில் சரண்


பெரம்பலூரில் பட்டப்பகலில் பயங்கரம்: மது பாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை நண்பர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 13 Dec 2020 5:31 AM IST (Updated: 13 Dec 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் பட்டப்பகலில் மது பாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய நண்பர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

பெரம்பலூர், 

அரியலூர் மாவட்டம் இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு அம்மன் நகர் மேட்டுத்தெருவில் வசித்து வருகிறார். அன்பழகனின் மகன் விஜயகுமார் (வயது 27). இவர் பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே உள்ள இரும்புக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

விஜயகுமார் நேற்று மதியம் தனது புதிய மொபட்டில், தனது நண்பரும், லாரி டிரைவருமான எளம்பலூர் சமத்துவபுரம் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த முகமது அன்சாரி மகன் நவாசுடன்(26) பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுடுகாடு எதிரே உள்ள வயல்பகுதிக்கு சென்றார். அங்கு அருகருகே அமர்ந்து 2 பேரும் மது குடித்தனர். அப்போது மது போதையில் விஜயகுமாருக்கும், நவாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது.

குத்திக்கொலை

இதில் ஆத்திரமடைந்த நவாஸ், கையில் இருந்த மதுபாட்டிலை உடைத்து, விஜயகுமார் கழுத்தில் சதக்... சதக்... என குத்தினார். இதில் படுகாயமடைந்த விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நவாஸ் உடனடியாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவாசை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த விஜயகுமாருக்கு பிரியா என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூரில் பட்டப்பகலில் நண்பரை மது பாட்டிலால் லாரி டிரைவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story