8 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஆலங்குடியை சேர்ந்தவர் நாகலாந்தில் மீட்பு குடும்பத்தினருடன் ஒப்படைப்பு
ஆலங்குடி அருகே வம்பனை சேர்ந்தவர், 8 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் நாகலாந்து மாநிலத்தில் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை,
ஆலங்குடி தாலுகா வம்பன் காலனியை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 50). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். திருமணமாகாதவர், அவ்வப்போது வீட்டை விட்டு வெளியில் செல்வதும், சிறிது நாட்களுக்கு பிறகு திரும்பி வருவதுமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் குமாரவேல், நாகலாந்து மாநிலத்தில் சுற்றித்திரிவதாக அங்குள்ளவர்கள் மூலம், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் குமாரவேலின் சகோதரர் ராமலிங்கம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்தார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், நாகலாந்து மாநில போலீசாரை தொடர்பு கொண்டும், அங்குள்ள தமிழ்ச்சங்கம் மூலம் நடவடிக்கை எடுத்தார். குமாரவேலை அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்துவரப்பட்டார். சென்னையில் இருந்து அவரை புதுக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, போலீசார் பிரபு, புஷ்பராஜ் மற்றும் தமிழ்செல்வம் ஆகியோர் தனிவாகனம் மூலம் பத்திரமாக புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனர்.
பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
மீட்கப்பட்ட குமாரவேலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது குமாரவேலுக்கு பூங்கொத்து கொடுத்து போலீஸ்சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வரவேற்றார். மேலும் அவரது குடும்பத்தினர், குமாரவேலை கண்டதில் ஆனந்த கண்ணீரில் வரவேற்றனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் வட மாநிலத்தில் மீட்கப்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலீசாருக்கு நன்றி
குமாரவேலுவின் உறவினர் மகாதேவன் நிருபர்களிடம் கூறுகையில், நாகலாந்தில் இருந்த குமாரவேலுவை மீட்டு கொடுத்ததற்கு கண்ணீர்மல்க போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதேபோல மாவட்டத்தில் காணாமல் போனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.
Related Tags :
Next Story