நெல்லையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 433 வழக்குகளுக்கு தீர்வு


நெல்லையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 433 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 13 Dec 2020 3:30 AM IST (Updated: 13 Dec 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 433 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று நெல்லை கோர்ட்டில் தேசிய லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதேபோல் 9 தாலுகா கோர்ட்டுகளிலும் மொத்தம் 15 அமர்வுகளுடன் இந்த மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

நெல்லையில் மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான நசீர் அகமது தொடங்கி வைத்தார். இதில் 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகாந்த், போக்சோ சிறப்பு அமர்வு கோர்ட்டு நீதிபதி இந்திராணி, குடும்பநல மாவட்ட நீதிபதி குமரேசன், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) பத்மா, கூடுதல் சார்பு நீதிபதி கிறிஸ்டல் பபிதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வஷீத்குமார், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு கோர்ட்டு நீதிபதி பிஸ்மிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கெங்கராஜ், 1-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா மற்றும் வக்கீல்கள், லோக் அதாலத் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 2,003 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் 433 வழக்குகளில் ரூ.11 கோடியே 81 லட்சத்து 15 ஆயிரத்து 28 சமரச தொகைக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய 25 வங்கி கடன் வழக்குகளில் ரூ.44 லட்சத்துக்கு சமரசம் செய்து முடிக்கப்பட்டது.

அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், சப்-கோர்ட்டு நீதிபதியுமான கவிதா தலைமையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வாகன விபத்து வழக்கு, வங்கி நிலுவைக்கடன், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்தனர்.

இதில் 9 வங்கி நிலுவைக்கடன் வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.7 லட்சத்து 51 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. அதேபோல் 11 சிவில் வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.14 லட்சத்து 18 ஆயிரத்து 740 வசூல் செய்யப்பட்டது.

Next Story