இன்று சீருடை பணியாளர் பணிக்கான எழுத்து தேர்வு: முன்னேற்பாடு பணிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இன்று சீருடை பணியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 பணியிடங்களை பொதுத்தேர்வு மூலம் நிரப்பிடுவதற்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 14 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 19,884 ஆண்களும் 4,281 பெண்களும், ஒரு திருநங்கை ஆக மொத்தம் 24,166 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வையொட்டி ஏதேனும் முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் இருக்க 14 தேர்வு மையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொறுத்தப்பட்டுள்ளதோடு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இந்நிலையில் விழுப்புரம், விக்கிரவாண்டி, அரசூரில் உள்ள தேர்வு மையங்களுக்கு நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் நேரில் சென்று தேர்வுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை வசதி மற்றும் காற்றோட்டமான வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டார். அதோடு தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதி இருக்க வேண்டும் என்றும், ஏதேனும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு தேர்வு அறையையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ்தங்கையா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலச்சந்தர், சாந்தி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story