உணவு பொட்டலங்களில் காலாவதி தேதி குறிப்பிடாத 7 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்
ஊட்டியில் உணவு பொட்டலங்களில் காலாவதி தேதி குறிப்பிடாத 7 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது. எனினும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து இருந்ததால், சுற்றுலா தலங்கள் அருகே உள்ள கடைகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், வியாபாரிகள் கடைகளை திறந்து உள்ளனர்.
இதற்கிடையே கடைகளில் விற்பனை செய்யப்படாமல் இருப்பு வைக்கப்பட்டு இருந்த தேயிலைத்தூள், சாக்லேட், பிஸ்கட், வர்க்கி போன்றவை கெட்டுப்போன பிறகும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து சுற்றுலா தலங்கள் அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் அறிவுரைப்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், நந்தகுமார் ஆகியோர் நேற்று ஊட்டியில் உள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகியவற்றின் அருகே உள்ள பேக்கரி, தேநீர், தைலம் உள்பட 35 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கெட்டுப்போன சாக்லேட் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து 5 கிலோ கெட்டுப்போன சாக்லேட் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மேலும் பேக்கிங் செய்யப்பட்ட பிஸ்கட், வர்க்கி போன்ற உணவு பொருட்கள் மீது உற்பத்தி செய்த நாள், அதன் அடக்க விலை, காலாவதி தேதி போன்ற விவரங்கள் குறிப்பிடாதது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவரங்கள் குறிப்பிடாமல் உணவு பொருட்களை விற்பனை செய்த 7 கடை உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வருகிற 4 நாட்களுக்குள் கடைகளில் விற்பனை செய்யும் உணவு பொட்டலங்கள் மீது உணவு பாதுகாப்பு நிர்ணய சட்டத்தின்படி விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அலுவலர்கள் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது தெரியவந்தால், 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம். மேலும் கடைகளில் விற்பனை செய்யும் உணவு பொட்டலங்கள் மீது கட்டாயம் விவரங்கள்(லேபிள்) இடம்பெற வேண்டும். இதை கண்காணிக்க இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றனர்.
Related Tags :
Next Story