திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,372 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும் நடக்கிறது


திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,372 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும் நடக்கிறது
x
தினத்தந்தி 13 Dec 2020 8:26 PM IST (Updated: 13 Dec 2020 8:26 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,372 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம் நடைபெற்றது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் மாதம் 16-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் வருவாய் கோட்ட அலுவலகம், நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயர் இடம் பெற்று உள்ளதா என சரிபார்த்து பெயர் சேர்க்க படிவம்-6, நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் செய்ய படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் கடந்த மாதம் 21, 22-ந் தேதிகளில் நடந்தது.

அதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக நேற்றும் வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,372 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. முகாம்களில் இளைஞர்கள் பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வி்ண்ணப்பித்தனர். மேலும் சிலர் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும் விண்ணப்பங்கள் அளித்தனர்.

கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், கொளத்தூர் ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட உதவி ஆணையர் (கலால்) கே.கண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் மற்றும் கடைகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தார்.

அப்போது கீழ்பென்னாத்தூர் தாசில்தார் வைதேகி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் எஸ்.சரளா, வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகரன், பிரவீன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

போளூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள புவிவானந்தல், ஈயகொளத்தூர், மண்டகொளத்தூர், கீழ்கரிக்காத்தூர் ஆகிய 4 கிராமங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட வினியோக அலுவலர் கி.ஹரிதாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தாசில்தார் சாப்ஜான், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மஞ்சுளா மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

தொடர்ந்து இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

Next Story